சிவத்தம்பி தமிழ்ப்பள்ளியின் ஒளிவிழா 2025
சிவத்தம்பி தமிழ்ப்பள்ளியின் ஒளிவிழா 2025, மாணவர்களின் திறமைகள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை ஒளிவிழாவின் தொடக்கமாக இடம்பெற்ற இறை வழிபாடு அனைவரையும் ஆன்மீக உணர்வுடன் ஒன்றிணைத்த சிறப்பான தருணமாக அமைந்தது.
ஒளிவிழாவிற்கு வருகை தந்து மாணவர்களுடன் இணைந்து ஆடிப்பாடி, இனிப்புகளும் பரிசுகளும் வழங்கி மகிழ்வித்த சன்ரா தாத்தாவுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. நத்தார் தாத்தாவாக களமிறங்கிய மாணவன் ஆறோசின் அப்பாவின் அற்புதமான நடிப்பும், ஆட்டமும், பாடலும் விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. அவரது “வேற லெவல்” நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்ததுடன், ஒளிவிழாவின் கொண்டாட்ட சூழலை மேலும் உயர்த்தியது.
தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை வழியில் தூக்கிக்கொண்டு, மனிதநேய உணர்வுடன் ஒளிவிழாவிற்கு வந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமகால சமூகக் கருத்தை கலை வடிவில் வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் சிந்திக்கவும் ஒன்றிணையவும் வைத்தது. உயிரற்ற உடலாக நடித்த மாணவன் வருணின் உணர்வுபூர்வமான நடிப்பு சில நொடிகள் அனைவரின் இதயத்தையும் வருடியது. இந்தக் கலைப்படைப்பை உருவாக்கிய மாணவி ஆத்மீகாவின் அப்பாவுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
சன்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த மாணவன் அரிசனின் திறமையும் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அவரது குரல் வெளிப்பாடு மற்றும் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
“பாலன் பிறந்த கதை” – சிறுவர்களின் அற்புதமான நடிப்பு
“பாலன் பிறந்த கதை” நாடகம் ஒளிவிழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. நேர்த்தியான ஆடை அலங்காரம், சிறப்பான நடிப்பு மற்றும் குழந்தைகளின் இயல்பான வெளிப்பாடு ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
மேரியாக நடித்த கர்னிகாவின் நடிப்பும், யோசேப்பாக நடித்த சந்தோஷின் நடிப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது. ஆடு, மாடு கதாபாத்திரங்களில் நடித்த மாணவர்கள் தங்களது நகைச்சுவை கலந்த நடிப்பால் சபையோரை மகிழ்வித்தனர்.
இந்நாடகத்தை சிறப்பாக நெறிப்படுத்திய ஆசிரியை துஷ்யந்திக்கு அனைவரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன. அதேபோல், சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களை மேடையில் சிறப்பாக வெளிப்படுத்திய ஆசிரியை வாசினிக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
மழலைக் குரலில் தமிழ் உரையாடல்களை மனனம் செய்து தன்னம்பிக்கையுடன் நடித்த குழந்தைகளின் தமிழ்த் திறமை அனைவரையும் பெருமைப்பட வைத்தது. குறிப்பாக கழுதை கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் நகைச்சுவையான தமிழ் உரையாடல் சபையோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “கற்பூர வாசம் அறியாத கழுதையும் சிவத்தம்பி தமிழ்ப்பள்ளிக்கு வந்தால் தமிழ்ப் பேசுமோ?” என்ற நகைச்சுவையான கருத்து கூட நிகழ்வின் மகிழ்ச்சியான தருணமாக பதிவானது.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி
மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பரிசுப்பொதிகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பள்ளி நிகழ்வுகளின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.
ஒவ்வொரு அழகிய தருணத்தையும் பொறுமையுடன் படம் பிடித்து, எதிர்கால நினைவுகளாக பாதுகாக்கும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து பகிர்ந்த ஆசிரியை யசோதரா அவர்களுக்கும் பள்ளி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.
சிவத்தம்பி தமிழ்ப்பள்ளியின் ஒளிவிழா 2025, வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, கலாசாரம், மனிதநேயம் மற்றும் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்திய மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
































