தைப்பொங்கல் விழா 2025

தைப்பொங்கல் விழா 2025

“உழவர் திருநாள் அழைத்தது எம்மை; ஒன்று கூடி பொங்கல் பொங்கி, படைத்துண்டு மகிழ்ந்தோம்!” என்ற உணர்வோடு 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா உற்சாகத்துடனும் பாரம்பரியப் பெருமையுடனும் நடைபெற்றது.

தாயகத்தை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மரபு, பண்பாடு மற்றும் பாரம்பரிய விழாக்களின் அருமையை அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறையில் அனுபவிக்கச் செய்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

கடுங்குளிர் நிறைந்த காலையிலும் மாணவிகள் பட்டுத் தாவணி அணிந்து அழகிய கோலங்களை வரைந்து விழாவிற்கு வரவேற்பளித்தனர். பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து தென்னங்குருத்தோலை மற்றும் மாவிலைகளால் தோரணங்கள் கட்டி விழா அரங்கைப் பாரம்பரிய அழகோடு அலங்கரித்தனர். அடுப்பு மூட்டி பொங்கல் வைக்கும் நிகழ்வைச் சுற்றி சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

விழா முழுவதும் சூடான தேநீர் மற்றும் பாற்கோப்பி வழங்கப்பட்டு, பங்கேற்ற அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சிப் புன்னகை பொங்கியது. பொங்கல் பொங்கி வழிந்த வேளையில் கதிரவனுக்கும் இயற்கைக்கும் நன்றியர்ப்பணம் செலுத்தப்பட்டு, பாரம்பரிய முறையில் படையல் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் மோதகம், கடலை, குழைசோறு, பன்னீர் பிரியாணி, வதக்கல், தக்காளி–கிழங்குக் குழம்பு, வத்தல் மிளகாய், அப்பளம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. பெற்றோர் அன்போடு அனைவருக்கும் உணவு பரிமாறி தமிழர் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தினர்.

கலைநிகழ்ச்சிகளும் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கதிரவன், தைப்பொங்கல் மற்றும் உழவர் பெருமையைப் போற்றும் கவிதைகள், உரைகள், பாடல்கள், அபிநய நடனங்கள் மற்றும் உழவர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. உற்சாகமாக கைதட்டி மாணவர்களை ஊக்குவித்த பார்வையாளர்களின் ஆதரவும் விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *